சென்னைக்கு குடிநீர் வழங்க 5-வது ஏரி தயாராகிவிட்டது

கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த பருவமழையின்போது தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தை படத்தில் காணலாம்
கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தை படத்தில் காணலாம்
Published on

ஊத்துக்கோட்டை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

இதேபோல் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.

இதுதவிர ஆரணி, குசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.

எனினும் கோடை காலங்களில் ஏரிகள் வற்றி விடுவதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்று சேர்த்து ரூ. 330 கோடி செலவில் பிரம்மாண்ட அணை கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி 1485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் ஆகியவற்றை கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் அருகே உள்ள ஜங்காலபள்ளி பகுதியில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கும் பணி மற்றும் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் புதிய அணைக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

இது மட்டுமல்லாமல் ஜங்காலபள்ளி மதகுகளில் இருந்து கண்ணன்கோட்டை வரை கிருஷ்ணா நதி நீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது.

மேலும் 7.15 கிலோ மீட்டர் தூரம் வரை கரைகள் அமைக்கும் பணிகள் முழுவதும் நிறைவுபெற்று விட்டன. இந்த கரைகள் மீது வாகனங்கள் வந்து செல்லும் விதமாக சாலை அமைக்கும் பணியும் முடிந்துள்ளது. இதுவரை 95 சதவீத பணிகளை நிறைவுபெற்றுள்ளன.

அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் சிலர் அரசு இழப்பீடு தொகை பெறாமல் இருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் 5 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

சில விவசாயிகள் இழப்பீடு தொகை தாமதமாக வழங்கியதற்கு வட்டியாக ரூ. 40 கோடி தர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதனால் 1.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வட்டி பணத்தை விவசாயிகளுக்கு செலுத்தி விட்டால் மீதம் உள்ள பணிகளை 20 நாளில் முடிக்க வாய்ப்பு உள்ளது.

இறுதி கட்ட பணிகளை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன், உதவி பொறியாளர்கள் பாபு, தனசேகர், சுந்தரம், பத்மநாபன் ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 5-வது முக்கிய ஏரியாக கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் உருவாகி உள்ளது. இதில் 1.50 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த பருவமழையின்போது கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் ராட்சத பைப்புகள் மூலம் ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கார் நகரில் உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் விடப்படும். அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பாய்ந்து செல்லும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com