

பழனி:
பழனி அருகே உள்ள கணபதிநகரைச் சேர்ந்தவர் பெரியசந்தானம் (வயது 32).கட்டிட தொழிலாளி. இவர் தபால் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் பெரியசந்தானத்திற்கு உதவுவது போல் அவரது ஏ.டி.எம் அட்டையை பெற்றுக் கொண்டு அவரிடம் வேறு அட்டையை கொடுத்தனர்.
வெளியே சென்ற பெரியசந்தானம் தனது அடையாள அட்டையை சரிபார்த்த போது அடையாள அட்டை மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற போது இவரது அடையாள அட்டையை பயன்படுத்தி 2 வாலிபர்கள் ரூ 15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு இருந்தனர்.
இதனைக் கையும் களவுமாக பிடித்த பெரியசந்தானம் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தார்.
பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 2 பேரும் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியை சேர்ந்த சங்கர்(23), மற்றொரு வாலிபர் சின்னாளபட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரம் முனியப்பன் தெருவைச் சேர்ந்த அருண்பாண்டியன் (24) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுக்க முடியாத வயதானவர்கள், பெண்கள் மற்றும் எழுத படிக்கத் தெரியாதவர்களிடம் உதவுவது போல் அவர்களது ஏ.டி.எம் அடையாள அட்டையை ஏமாற்றி வேறு அட்டையைக் கொடுத்து விட்டு அவர்களின் கணக்கில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இது வரை 3 ஆண்டுகளாக 56 ஏ.டி.எம் மையங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இவர்கள் கொள்ளை அடித்த பணம் பல லட்சங்கள் இருக்கும் என தெரியவந்து உள்ளது.
போலீசார் இவர்களிடம் இருந்து ரூ 37 ஆயிரத்தை கைப்பற்றியுள்ளார்கள். போலீசார் 2 பேரையும் கைது செய்து பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி பிரியா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் பழனி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.