சிரியாவில் உச்சகட்ட தாக்குதல் - ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

வடக்கு மற்றும் தெற்கு சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருவதால் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. #SaveSyria #looming disaster #50KSyriansflee
சிரியாவில் உச்சகட்ட தாக்குதல் - ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
Published on

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர்.

கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் தொலைத்துவிட்டு, உயிருக்கு பயந்து அவர்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com