

சென்னை:
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கு ஜெயலலிதா மரணம் குறித்த ரகசிய தகவலை 50 பேர் அனுப்பி உள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், டிசம்பர் 5-ந் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தீர்வுகாணும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 17-ந் தேதி ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் தலைவராக செப்டம்பர் 30-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கலசமகாலில் விசாரணை ஆணையத்துக்காக ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 27-ந் தேதி அந்த அறைக்கு வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, கோப்புகளில் கையெழுத்திட்டார். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாகவும், அந்த ஆணையத்துக்கு தெரிந்த தகவலை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அளிப்பதற்கு பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஜெயலலிதா மரணம் குறித்து 15 பேருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு உரிய விளக்கம் வந்த பிறகு விசாரணை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணை ஆணைய அலுவலகத்தில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு உதவியாளர்களாக மொத்தம் 13 பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் சட்டக்குழுவும், மருத்துவக்குழுவும் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட 15 பேரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேசமயம் விசாரணை ஆணையம் தெரிவித்ததுபோல, ஜெயலலிதா மரணம் குறித்த ரகசிய தகவலை இதுவரை 50 பேர் தபால் மூலம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வருகிற 22-ந் தேதி வரை இதுபோன்ற தகவலை தெரிவிக்கலாம்.