பிரதமரின் தொழிலாளர் விருது: 50 நபர்களின் பெயர்கள் அறிவிப்பு

சிறப்பாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஷ்ராம் விருதிற்கான 50 நபர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிரதமரின் தொழிலாளர் விருது: 50 நபர்களின் பெயர்கள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

தொழிலாளர்களின் பணியை பாராட்டும் வகையில் ஆண்டு தோறும் பொதுத்துறை  மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஷ்ராம் விருதுகள் வழங்கப்படுகின்றன. நான்கு பிரிவுகளை கொண்டுள்ள இந்த விருதுகள் 50 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஷ்ராம் ரத்னா, ஷ்ராம் பூஷன், ஷ்ராம் வீரர்/ஷ்ராம் வீராங்கனை, ஷ்ராம் ஸ்ரீ/ஷ்ராம் தேவி என நான்கு பிரிவுகள் உள்ளன. இந்த விருதுகள் தொழிலாளர் அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும்.

ஷ்ராம் ரத்னா விருதிற்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஷ்ராம் பூஷன் விருதிற்கு செயில், பெல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களை சார்ந்த 12 தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், விருதும் வழங்கப்படும்.

ஷ்ராம் வீரர்/ஷ்ராம் வீராங்கனை விருது கப்பற்படை பட்டறை, ராணுவ தளவாட தொழிற்சாலை, ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ நிறுவனம், பாரதீப் பாஸ்பேட்ஸ் மற்றும் பிராக்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 18 தொழிலாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

ஷ்ராம் ஸ்ரீ/ஷ்ராம் தேவி விருதுகள் சிமெண்ட் நிறுவனம், கப்பல் சரிசெய்யும் தளம், டாடா மோட்டார்ஸ், சூரத் லிக்னைட்  மின் நிலையம் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களிலிருந்து 20 தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி விருதுகள் வழங்குவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com