கச்சிராயப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

கச்சிராயப்பாளையம் அருகே ஆற்றின் கரையோரம் காலை கழுவியபோது தவறி விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
Published on

கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மத்தியகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சந்தோஷ்குமார்(வயது 10). இவன் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற சந்தோஷ்குமார் மாலையில் வீடு திரும்பினான். பின்னர் வீட்டின் அருகே உள்ள மத்தியக்குறிச்சி ஆற்றுக்கு சென்றான். அதன் பின் அவன் வீடு திரும்பவில்லை. மகன் வெளியே சென்று வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் கிருஷ்ணன் பல இடங்களில் சென்று தேடிபார்த்தார். எங்கும் அவனை காணவில்லை.

இந்தநிலையில் இன்று காலை மத்தியக்குறிச்சி ஆறு செல்லும் தாகாப் பாடியம்மன் கோவில் பின்புறம் சந்தோஷ்குமார் பிணமாக கிடந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றின் கரையோரம் பிணமாக கிடந்த சந்தோஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சந்தோஷ்குமார் ஆற்றின் கரையோரம் காலை கழுவியபோது தவறி விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com