

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந்தேதி (இன்று) தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் அறிவித்தது.
இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., டி.டி.வி. தினகரன், நடிகர் விஷால் உள்பட 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நடிகர் விஷால் உள்பட 86 பேர் மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.
இதையடுத்து தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இவர்கள் கடந்த இரு வாரங்களாக ஆர்.கே.நகர் தொகுதி முழுக்க பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.
பிரசாரம் ஓய்ந்த நிலையில் 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 59 வேட்பாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 4 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. 1638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகளை செய்தனர்.
காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து வாக்களித்தனர். இதனால் 258 ஓட்டுச் சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
பல வாக்குச்சாவடிகளில் அதிகாலையிலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்கை முதலிலேயே பதிவு செய்து விடவேண்டும் என்று வந்து காத்திருந்தனர். ஓட்டுப் பதிவு அனைத்தும் முழுமை யாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.
கட்சி பிரமுகர்கள் தங்கள் கைகளில் பட்டியலை வைத்தபடி வாக்காளர்களை அழைத்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அந்த வாக்கு சாவடியில் காலையிலேயே அதிக வாக்குகள் பதிவானது.
திருவொற்றியூரில் 2 திருநங்கைகள் முதன் முறையாக வாக்களித்தனர். குறிப்பாக இளைஞர்களும், முதல் தடவை வாக்களிப்பவர்களும் மிகவும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
வயதானவர்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 1 மணி நேரத்தில் அதாவது 9 மணிக்கு 7.32 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பகல் 1 மணி நிலவரப்படி 41.6% வாக்குகள் பதிவாகின.