

கோடை விடுமுறைக்கு பின்னர் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
கல்லூரிகள் திறப்பின் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் அதை தடுப்பதற்காக முக்கிய கல்லூரி வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது.
கல்லூரி அரசு பஸ் வழித்தடங்கள், கல்லூரி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனினும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அட்டகாசம் செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் ‘பஸ் டே’ கொண்டாட ஏற்கனவே ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
மேலும் பஸ்களின் மேற்கூரைகளில் ஏறவோ, பஸ்களில் பயணிகளுக்கு இடையூறு செய்யவோ கூடாது என போலீசாரும் எச்சரித்திருந்தனர்.
ஆனால் போலீஸ் எச்சரிக்கையை மீறி கல்லூரி மாணவர்கள் பஸ்களின் மேற்கூரை மீது ஏறி பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம்வரை, ஐ.சி.எப்.பில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் வழித்தடம் என மாநகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் பேருந்தின் டிரைவர் திடீரென பிரேக் போட, மேற்கூரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டது. அப்போதும் மாணவர்கள் தங்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்தனர்.
இவ்வாறு ரகளை செய்த 40 மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். முதல் நாள் என்பதால் அவர்களை கடுமையாக எச்சரித்த போலீசார் மாணவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர். சில மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்களை கொண்டாட்டத்துக்கு தூண்டி விட்டது முன்னாள் மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களையும் மடக்கிப் பிடித்த போலீசார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரம்காட்டி வருகின்றனர்.
பொது மக்களுக்கோ, பயணிகளுக்கோ இடையூறு செய்யும் வகையில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
அனைத்து கல்லூரி வாசல்களிலும் மாணவர்களிடம் போலீசார் இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.