சுவாமிமலை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் காவிரி, அரசலாறில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
அப்போது காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் (வயது 32), மகேந்திரன்(28), பிரவீன்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் அரசலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த வளையப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற மோகனசெல்வம் (28) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவாமிமலை போலீசார் தெரிவித்தனர்.

