குன்னம் அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

போக்குவரத்திற்கு இடையூறாக நின்றவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னம் அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 37). அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் பால்ராஜூவுடன் (25) சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் புதுவேட்டக்குடியிலிருந்து புறப்பட்டு நல்லறிக்கை கிராமத்தை நோக்கி அருள்ராஜ் சென்று கொண்டிருந்தார். வரும் வழியில் இருந்த டாஸ்மாக் கடை அருகே காரை நிறுத்திவிட்டு அதன் கதவினை திறந்து வைத்தபடி சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அருள்ராஜ், அந்த நபர்களிடம் சென்று போக்குவரத்திற்கு இடையூறின்றி கார் கதவை மூடி வைத்திருக்கலாமே? என கூறினார். அப்போது அவர்கள் அருள்ராஜ், பால்ராஜூடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதில் ஆத்திரத்தில் காரில் இருந்தவர்கள் அருள்ராஜை தலையிலும் பால்ராஜை காலிலும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதில் வெட்டு காயமடைந்த 2 பேரும் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அரிவாளால் வெட்டியவர்கள் பெரம்பலூரை சேர்ந்த சதீஸ் (20), ஜமால் அகமது (21), வேல்முருகன் (25), சின்ன சேலத்தை சேர்ந்த ராஜ்குமார் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சதீஸ் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com