

மதுரை உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் முன்பு இருந்தது. பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்க நிறைய செலவாகும் என்பதால் சிறிதும் ஈவு இரக்கம் இல்லாமல் அந்த கொடூரத்தை அரங்கேற்றி வந்தனர்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது. அதன் பிறகு உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் மறைந்து போனது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் மீண்டும் அந்த பழக்கம் நடைமுறைக்கு வந்து இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்த புல்லநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுருகன் (வயது 32). இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சவுமியா மீண்டும் கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஜனவரி மாதம் 31-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த வைரமுருகன் குடும்பத்துக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிறந்து 31 நாட்களே ஆன பெண் சிசுவை குடும்பத்தினரே கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைத்து விட்டனர் என்று யாரோ காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அங்கு வைரமுருகன் குடும்பத்தினர் எவரும் இல்லை. வீடு பூட்டிக்கிடந்தது.
அவர்களிடம் செக்கானூரணி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வைரமுருகன் ‘எனக்கு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை.
எனவே அதனை கொல்வது என்று நானும், எனது தந்தையும் முடிவு செய்தோம். இதனைத் தொடர்ந்து 31 நாளே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தோம். பின்னர் உடலை வீட்டு முன்பு புதைத்து விட்டோம்’ என்றார். இந்த தகவலை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாசில்தார் செந்தாமரை முன்னிலையில் சிசுவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பிறகு உசிலம்பட்டி டாக்டர்கள் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் பிறந்த குழந்தையை பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரில் ஒரு தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
பிறந்து சில நாட்களே ஆன நிலையில்திடீரென்று அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி நேற்று செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வாலாந்தூர் போலீசார் விரைந்து சென்று பிறந்து 18 நாட்களில் இறந்த பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.