மஞ்சள் ரே‌ஷன் கார்டுக்கு ரூ.300 ரொக்கப்பணம் வங்கியில் செலுத்தப்பட்டது

மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான இலவச அரிசிக்கான பணம் ரூ.300 பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை சார்பில் மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ மற்றும் சிகப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரொக்கப்பணமாக செலுத்தும்படி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இதனால் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் இலவச அரிசிக்கான கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்தார். இதனால் பயனாளிகள் அரிசியும் கிடைக்காமல், பணமும் கிடைக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் சட்ட மன்றத்தில் இலவச அரிசியே வழங்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தீர்மான நகலுடன் கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

ஆனால், கவர்னர் மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பிவிட்டதால் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதையடுத்து அமைச்சர் கந்தசாமி மத்திய அரசிடம் இருந்து இலவச அரிசி வழங்க அனுமதி கிடைக்கும் வரை பயனாளிகளின் வங்கி கணக்கில் ரொக்கப்பணம் செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இதன்படி மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான இலவச அரிசிக்கான பணம் ரூ.300 பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் நலத்துறை அமைச்சர் கந்தசாமி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான பணம் ரூ.600, மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தப்பட உள்ளது.

சிகப்பு ரே‌ஷன்கார்டு தாரர்களுக்கு ஏப்ரல் மாத அரிசிக்கான தொகை ஒரு மாதத்திற்குள் வங்கியில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் அனுமதியை பெற்று படிப்படியாக இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com