

சென்னை:
பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளுக்கு இன்று முதல் 30 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்திலும், கடற்கரை/மூர்மார்க்கெட்-திருவள்ளூர்/அரக்கோணம் மார்க்கத்திலும், கும்மிடிப்பூண்டி -மூர்மார்க்கெட், கடற்கரை -வேளச்சேரி இடையேயும் 30 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.50 மணிக்கும், மதியம் 12.35, 2.20 மணிக்கும் மாலை 4.10 மணிக்கும் வேளச்சேரிக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
* சென்னை கடற்கரைக்கு, வேளச்சேரியில் இருந்து காலை 9.55, 11.45 மணிக்கும், மதியம் 1.30, 3.15 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு சிறப்பு மின்சார ரெயில் காலை 10.15 மணிக்கு புறப்படும். அரக்கோணத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் புறப்படும்.
* கடற்கரையில் இருந்து ஆவடிக்கு மதியம் 2.45 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் புறப்படும். ஆவடியில் இருந்து கடற்கரைக்கு மதியம் 3.40 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் புறப்படும்.
* கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.15 மணிக்கும், மதியம் 3.08 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் புறப்படும்.
* செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.25 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும், மாலை 5.15 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் புறப்பட்டு செல்லும்.
* கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 7.30, 9.55 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும்.
* தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 8.35 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 8.10 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
* சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூருக்கு மதியம் 2.05 மணிக்கும், இரவு 7.35 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் புறப்பட்டு செல்லும்.
* திருவள்ளூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கும், இரவு 9.10 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் விடப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டிக்கு, ஆவடியில் இருந்து காலை 8.10 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து மதியம் 3.25 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் செல்லும்.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து திருவள்ளூருக்கு காலை 10.15 மணிக்கும், சென்னை மூர்மார்க்கெட்டுக்கு மாலை 6 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNTransportstrike #Busstrike #ElectricTrain #Tamilnews