நெல்லையில் ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நெல்லையில் ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேர் கைது
Published on

நெல்லை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நெல்லை சந்திப்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு போலீஸ் உதவி கமி‌ஷனர் மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சந்திப்பு நுழைவு வாயிலில் போராட்டக்காரர்கள் நுழையாதவாறு பேரிகார்டு மற்றும் கயிறு மூலம் தடுப்பு அரண் அமைத்து பயணிகள் செல்வதற்காக மட்டும் வழி செய்திருந்தனர்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் நல்லதம்பி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலுக்காக ஊர்வலமாக வந்தனர். அவர்கள் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியவாறு ரெயில் நிலையத்தில் நுழைய முயற்சி செய்தனர்.

இதனால் போலீசாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ரெயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்தவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நிர்வாகிகள் கண்ணன், சண்முக சுந்தரராஜா, மணிகண்டன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இதேபோல் தென்காசி, அம்பை, வள்ளியூர், சங்கரன் கோவில் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com