திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் சஜித் புருனோ (வயது 13). இவனும், ரெட்டியபட்டியை சேர்ந்த பாஸ்கர் அருளானந்தம் மகன் சதீஷ் அருளானந்தம் (12), பாலமரத்துபட்டியை சேர்ந்த அன்பழகன் மகன் ராகுல்(13) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் கொசவபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் சஜித் புருனோவின் தங்கை ஜலின் செமிமாவிற்கு நேற்று பிறந்தநாள். இதனால் தனது நண்பர்களான சதீஷ் அருளானந்தம், ராகுல் ஆகியோரை சஜித் புருனோ தனது வீட்டிற்கு அழைத்துள்ளான்.

பிறந்தநாள் கொண்டாடிய பின்னர் 3 மாணவர்களும் பாலமரத்துபட்டி அருகே உள்ள கொண்டார்பிள்ளை குளத்திற்கு குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் 3 பேரும், குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் தத்தளித்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய சஜித் புருனோ உள்பட 3 பேரையும் மீட்டனர். ஆனால் அவர்களை பிணமாகவே மீட்க முடிந்தது.

பின்னர் 3 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com