

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், அந்த காரில் பயணம் செய்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி நாரேலா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 2 பெண்கள் உட்பட 7 மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்கு தேர்வெழுத சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக குப்புற விழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிய மாணவர்களை மீட்டு அருகிலிருந்த சிட்டி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் உயிரிழந்த 3 மாணவர்களில் இருவரின் கண்களை தானம் செய்ய அம்மாணவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். சான்சிட் சப்ரா, ரிது சிங் ஆகிய இருவரின் கண்களும் தானம் செய்யப்பட இருப்பதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர்களில் ராஜாட் என்ற மாணவர் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரனவ், கரிமா, ரிஷப், ராஜா உள்ளிட்ட மாணவர்கள் இன்னமும் மயக்க நிலையிலே இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.