

சென்னை:
அடையாறு சிக்னல் அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காருக்குள் டிரைவருடன் சேர்த்து 3 பேர் இருந்தனர். அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தினர். காரில் இருந்த 5 வீச்சரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காரில் ஆயுதங்களுடன் சுற்றியவர்களின் பெயர் ஜீவா, ராஜா என்பதும் டிரைவர் பெயர் வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது.
பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி பினுவின் கூட்டாளியான பல்லு மதன் என்பவரை தீர்த்துக் கட்டும் சதி திட்டத்துடன் 3 பேரும் காரில் சுற்றியது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ராஜா, ஜீவா இருவர் மீதும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. ஓட்டல் அதிபர் சிவபிரகாசத்தை வெட்டிய வழக்கில் 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில்தான் அடையாறில் சிக்கியுள்ளனர். இதனால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.