

சென்னை:
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு “அம்மா கல்வியகம்” என்ற பெயரில் கட்டணமில்லா வெப்சைட்டை ஓ.பன்னீர்செல்வம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.
மாணவர்கள், இளைஞர்கள் உயர்கல்வி பெறுவதற்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல் இதில் இடம் பெறுகின்றன.
பிளஸ்-2 மாணவர்களின் பாடத்திட்டம், ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற உலகத்தரம் நுழைவுத்தேர்வு பயிற்சிகள், வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பயன் பெறக்கூடிய வகையில் இந்த வெப்சைட்டில் அளிக்கப்படுகின்றன.
இந்த வெப்சைட் தொடங்கிய 2 நாளில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்திய அளவில் தலை சிறந்த பேராசிரியர்களின் பயிற்சிகள், வழிகாட்டுதல்கள், வீடியோ படங்களுடன் இதில் இடம் பெறுகின்றன.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ படங்கள் முதல்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு அறிவு பெட்டகமாக விளங்கி வருவதாக தகவல் தொழில் நுட்ப பிரிவு அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
அடுத்தக்கட்டமாக ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சிகளும் விரைவில் அம்மா கல்வியகம் மூலம் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அம்மா கல்வியகத்தின் மூலம் பயன் அடைந்த கோவில்பட்டியை சேர்ந்த புஷ்பா என்ற பெண் கூறியதாவது:-
நான் டெய்லர் தொழில் செய்கிறேன். என் மகன் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு பயிற்சி பெறுவதற்கு ஆசைப்பட்டான். மதுரையில் சென்று பயிற்சி பெறுவதற்கு ரூ.1½ லட்சம் கட்டணம் கேட்டார்கள். அவ்வளவு தொகை என்னால் கொடுக்க இயலாது.
தற்போது ‘அம்மா கல்வியகம்’ மூலம் மகன் வீட்டில் இருந்தபடியே பயிற்சி எடுத்து வருகிறான். அதில் உள்ள பயிற்சிகளை பின்பற்றி படித்து வருகிறான்.
எங்களை போன்ற ஏழை குடும்பங்களுக்கு இந்த ‘வெப்சைட்’ மிகவும் உதவியாக இருக்கிறது என்றார்.