ஆம்பூரில் வி‌ஷவாயு தாக்கி 3 பேர் பலி

ஆம்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது வி‌ஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூரில் வி‌ஷவாயு தாக்கி 3 பேர் பலி
Published on

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் பெரியவரிகம் என்ற இடத்தில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் ஆம்பூரை சேர்ந்த ரங்கநாதன் (வயது 46), பந்தேரிபல்லியை சேர்ந்த சின்னதம்பி மகன்கோதண்டன் (31), கீழ்மிட்டாளத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் செல்வம் (25) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

நேற்று தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சக தொழிலாளர்கள் டீ குடிக்க வெளியில் சென்றனர். கோதண்டனும், செல்வமும் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ரங்கநாதன் இந்த பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து திடீரென வி‌ஷவாயு தாக்கியதில் செல்வம் அந்த தொட்டியிலேயே மூழ்க ஆரம்பித்தார்.

அவரை காப்பாற்ற கோதண்டன் முயற்சி செய்தபோது அவரையும் வி‌ஷவாயு தாக்கியது. இதனைப் பார்த்த ரங்கநாதன் தொட்டியில் இறங்கி 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் வி‌ஷவாயு தாக்கியது இதனால் மூச்சு திணறி கழிவுநீரில் மூழ்கி 3 பேரும் இறந்தனர்.

வி‌ஷவாயு தாக்கி 3 பேர் இறந்த தகவல் அறிந்ததும் சகதொழிலாளர்களும், 3 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பதற்றத்துடன் தொழிற்சாலைக்கு வந்தனர்.

அப்போது 3 பேரின் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும், அதுவரை உடலை இங்கிருந்து எடுத்து செல்லக்கூடாது என கூறி தொழிற்சாலையின் கதவுகளை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தொழிலாளர்கள் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்சையும் செல்லவிடாமல் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

பலியான 3 பேர் உடல்களும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை பராமரிக்காமல் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் தொழிற்காலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்தம் செய்வது குறித்து மாதந்தோறும் ஆலோசனை வழங்கப்படுகிறது. கழிவுநீர் தொட்டிகளை எந்திரங்கள் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தொழிலாளர்களை பயன்படுத்த கூடாது என்ற விதி உள்ளது.

தோல் தொழிற்சாலை நிர்வாகம் விதியை மீறி தொழிலாளர்களை வைத்து கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர்.

இதுதொடர்பான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விதிமீறியதால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான தோல் தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com