

சென்னை:
கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 35 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதனால், வழக்கத்தை காட்டிலும் ரூ.49 லட்சம் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்கள் ஓரளவு மக்களுக்கு கை கொடுத்து வருவதால், மற்ற மாவட்டங்களை காட்டிலும் இங்கு பாதிப்பு சதவீதம் குறைவே.
தினசரி சராசரியாக 10 லட்சம் பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் மட்டும் அந்த எண்ணிக்கை வெகுவாக குறையும். ஆனால் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் கடந்த 3 நாட்களில் மட்டும் மின்சார ரெயிலை பயன்படுத்தியோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
அந்தவகையில் கடந்த 5-ந்தேதி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், 6-ந்தேதி 2 லட்சத்து 2 ஆயிரம் பேரும், 7-ந்தேதி ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 3 நாட்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் கூடுதலாக மின்சார ரெயிலை பயன்படுத்தி உள்ளனர்.
இவர்கள் மூலம் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையில் முறையே ரூ.10 லட்சம், ரூ.33 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.49 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மின்சார ரெயில் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இதுதவிர செல்போன் மூலம் டிக்கெட் எடுப்பதிலும் பயணிகளுக்கு ஆர்வம் மேலோங்கி உள்ளது. இதற்கான ‘ஆப்’ மூலம் தங்கள் செல்போனிலேயே மின்சார ரெயில் டிக்கெட்டை பயணிகள் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 5-ந்தேதி 24 ஆயிரம் பேரும், 6-ந்தேதி 25 ஆயிரம் பேரும், 7-ந்தேதி 32 ஆயிரம் பேரும் என மொத்தம் 81 ஆயிரம் பேர் செல்போனில் டிக்கெட் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.