திருச்சி அருகே தெருவில் விளையாடிய 2 வயது சிறுவன் கடத்தல்?

திருச்சி அருகே தெருவில் விளையாடிய 2 வயது சிறுவன் மாயமானது குறித்து அவனது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உப்பிலியபுரம்:

நீலகிரி குன்னூரை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 38). அரசு தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் ஹாரீசன் (2). உறவினர் ஒருவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவேந்திரன் தனது மனைவி, மகனுடன் கடந்த வாரம் திருச்சி மாவட்டம் கல்லாத்துக்கோம்பை கிராமத்துக்கு வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மனைவி, மகனை உறவினரான செல்லையா வீட்டில் தங்க வைத்துவிட்டு குன்னூருக்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை ஹாரீசன் கல்லாத்து கோம்பையில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். மதியம் சாப்பாடு ஊட்டுவதற்காக புவனேஸ்வரி மகனை அழைக்க சென்றார். அப்போது விளையாடி கொண்டிருந்த ஹாரிசனை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து திருச்சி எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில், முசிறி டி.எஸ்.பி. பிரம்மானந்தம், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தொட்டியம் இன்ஸ்பெக்டர் ப்ராங்கிளின், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எஸ்.பி. செந்தில் குமார் மாயமான சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

கொல்லிமலை அடிவார பகுதியான கல்லாத்து கோம்பையில் வயல் வெளிகள், கிணறுகள் அதிகமாக உள்ளது . இதனால் கிணற்றில் ஏதும் ஹாரீசன் தவறி விழுந்திருப்பானோ? என்று எண்ணி கிணறுகளில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. 

அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை செய்தனர். வாகனங்களில் செல்பவர்கள் யார் அழைத்தாலும் ஹாரீசன் அதில் ஏறிக்கொள்வான். இதனால் ஹாரீசனை யாராவது கடத்தி சென்றார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி குற்றப்பிரிவு போலீசாரும் இன்று காலையில் இருந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 2 வயது சிறுவன் மாயமானதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com