247 சிலைகள் பறிமுதல் - ரன்வீர்ஷா-பெண் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை

சிலை கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா மற்றும் பெண் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IdolTheft #RanvirShah
247 சிலைகள் பறிமுதல் - ரன்வீர்ஷா-பெண் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை
Published on

சென்னை:

சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜ், டி.எஸ்.பி. சுந்தரம் ஆகியோர் நடத்திய சோதனையில் பழங்கால கற்சிலைகள், கல்தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ரன்வீர்ஷா வெளிநாடு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ரன்வீர் ஷாவின் நண்பரான பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் வீட்டிலும் சிலைகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. கடந்த 2 நாட்களாக வீட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி போலீசார் அங்கிருந்து 23 சிலைகளையும் மீட்டுள்ளனர்.

இதுவரையில் ரன்வீர்ஷா மற்றும் பெண் தொழில் அதிபர் வீடுகளில் இருந்து மொத்தம் 247 சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து திருட்டு சிலைகளை ரன்வீர்ஷா வாங்கி இருப்பதாக போலீசார் கூறி வருகிறார்கள். ஆனால் ரன்வீர்ஷா தரப்பிலோ சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளன என்று கூறி வருகிறார்கள். இதனை சிலை தடுப்பு பிரிவு போலீசார் மறுத்து வருகிறார்கள்.

ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் திருட்டு சிலைகள்தான் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரன்வீர்ஷா சென்னையில் இல்லை. அவர் வெளி மாநிலத்தில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே ரன்வீர்ஷா தப்பி சென்று விட முடியாது. தீனதயாளன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் ரன்வீர்ஷா சேர்க்கப்படுவார். அதன்பின்னர் அவர் மீது கைது நடவடிக்கை பாயும். இதே போல பெண் தொழில் அதிபரான கிரண்ராவ் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தையும் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்க சிலை தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அனைத்து சிலைகளையும் அங்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் கோர்ட்டு அனுமதியுடன் ஊழியர் ஒருவரை சிலைகள் இருக்கும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிரண்ராவ் பிரபலமான சிமெண்டு கம்பெனி நடத்தி வருகிறார். அதில் அவர் இயக்குனராக உள்ளார். ரன் வீர்ஷாவும் இந்த நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார்.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நட்பின் அடிப்படையில் கிரண்ராவ், ரன்வீர்ஷாவுக்கு அந்த பொறுப்பை வழங்கியதாக கூறப்படுகிறது. #IdolTheft #RanvirShah

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com