நெல்லை மாவட்டத்தில் 2250 மருந்து கடைகள் - ஓட்டல்கள் அடைப்பு

ஆன் லைன் வர்த்தகம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்று வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் 2250 மருந்து கடைகள், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஓட்டல்களும் அடைக்கப்பட்டன.
ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் ஓட்டல்கள், மருந்து கடைகள் மூடப்பட்டு உள்ள காட்சி.
ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் ஓட்டல்கள், மருந்து கடைகள் மூடப்பட்டு உள்ள காட்சி.
Published on

நெல்லை:

தமிழகம் முழுவதும் ஆன் லைன் வர்த்தகம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்று வலியுறுத்தி அனைத்து மருந்து கடைகளும் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இது போல மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2250 மருந்து கடைகள் உள்ளன. இதில் நெல்லை மாநகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளும், மொத்த மருந்து கடைகளும் உள்ளன. இந்த மருந்து கடைகள் அனைத்தும் இன்று முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக ஆன் லைன் மருந்து விற்பனைக்கு மத்திய-மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் இன்று காலை மருந்து வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி, வள்ளியூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை, அம்பை, திசையன்விளை உள்பட எந்த பகுதியிலும் இன்று மருந்து கடைகள் திறக்கப்படவில்லை. சிறிய மருந்து கடைகள் உள்பட அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதுபோல நெல்லை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து பெரிய ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. சிறிய ஓட்டல்கள்- டீ கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

நெல்லை மாநகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பெரிய ஓட்டல்களும் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. இது போல வள்ளியூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெரிய ஓட்டல்களும் இன்று அடைக்கப்பட்டு இருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்திலும் மருந்து கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. மொத்தம் 120 ஓட்டல்களும், 400 மருந்து கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஸ்டிரைக் காரணமாக மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் அம்மா மருந்தகங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com