

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. வரி நடைமுறை கடந்த 1-ந்தேதி அமலுக்கு வந்தது.
இதையடுத்து ஒரே வரி விதிப்புக்கான நடைமுறைகளை மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மாநில எல்லைகளில் உள்ள வணிக வரி சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிமுகமான 1-ந்தேதியே தமிழ்நாடு - கேரளா, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகள் தங்களது தினசரி பணியை நிறுத்தி விட்டன.
கடந்த 3 நாட்களில் 22 மாநில அரசுகள் தங்கள் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை மூடி விட்டன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் தற்போது வணிக வரி சோதனை சாவடிகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அசாம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்த 8 மாநிலங்களிலும் முழுமையாக சோதனை சாவடிகளின் பணிகள் நிறுத்தப்பட்டு விடும் என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் ஜி.எஸ்.டி. மசோதா இன்று நிறைவேற்றப்படுகிறது. அதன் பிறகு காஷ்மீர் மாநிலத்திலும் சோதனை சாவடிகளை மூடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு மாநிலங்களுக்கு இடையில் லாரிகள், கண்டெய்னர்களில் சரக்குகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும்போது, எல்லையில் வணிக வரி சோதனை சாவடிகளில் நிறுத்தி வரி கட்டியுள்ளார்களா என்று சோதனை நடத்தப்படும். இல்லையெனில் வரி வசூலிப்பார்கள்.
இந்த நடைமுறைக்காக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சரக்கு லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும். சில சமயம் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு லாரிகள் வரிசையாக நிற்கும்.
இதனால் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் தாமதம் ஏற்படும். சில சோதனை சாவடிகளில் சரக்குகள் தேங்கி விடுவதுண்டு.
சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு விட்ட காரணத்தால், இனி லாரிகள் எல்லைப் பகுதிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்தியாவசிய சரக்குகளும் இனி தேங்காது.