லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து 22 அகதிகள் பலி

லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் சிறிய படகில் சென்ற 22 அகதிகள் நீரில் மூழ்கி பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது.
படகு கவிழ்ந்து விபத்து - கோப்புப்படம்
படகு கவிழ்ந்து விபத்து - கோப்புப்படம்
Published on

திரிபோலி:

உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியாக கடலில் சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இது போன்ற பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகில் பயணம் செய்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இந்த படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது. லிபிய கடலோர காவல் படையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமை இதே ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com