

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளாடுகளை வேளாண்மை துணை இயக்குநர் அண்ணாதுரை வழங்கினார்.
ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் உடும்பியம், கள்ளப்பட்டி, வெங்கனூர், தழுதாழை, பெரியம்மாபாளையம் ஆகிய ஊர்களில் 2014 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு 2017-18 ம் ஆண்டிற்கு இயற்கைவள மேம்பாட்டு பணிக்கு ரூ.71 லட்சமும், வேளாண் உற்பத்தி சார்ந்த பணிகளுக்கு 12 லட்சமும், வாழ்வாதார பணிகளுக்கு 30 லட்சமும் மொத்தம் ரூ. ஒரு கோடியே 12 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் வாழ்வாதார பணிகள் மூலம் உடும்பியம் கிராமத்தில் நிலமற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 21 பயனாளிகளை தேர்வு செய்து தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் அண்ணாதுரை தலைமை தாங்கி ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 4 வெள் ளாடுகளை வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குநர் பாபு, நீர் வடிபகுதி மேம்பாட்டுத்திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் பழனிசாமி, வேளாண்மை துணை அலுவலர் பெரியசாமி, செயற் பொறியாளர் சிவானந்தம், நீர்வடி பகுதி மேம்பாட்டு திட்ட கிளை தலைவர்கள் ராஜகுமாரி அம்மாசி, தெய்வீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.