உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் உ.பி. எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை - ரூ.25 லட்சம் அபராதம்

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உ.பி. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றவாளி குல்தீப் சிங் செங்கார்
குற்றவாளி குல்தீப் சிங் செங்கார்
Published on

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ’நான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் என்னை கடத்திச் சென்று கற்பழித்து விட்டார்’ என உள்ளூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த புகாரின்மீது வழக்குப்பதிவு செய்யாமல்  போலீசார் இழுத்தடித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்றார்.

இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்த பின்னர் ஒருவழியாக போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். லக்னோ நீதிமன்றத்தில் இந்த கற்பழிப்பு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வக்கீல், தாயாருடன் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது காரின்மீது லாரி மோதியதில் அவரது உறவுக்கார பெண் மற்றும் வக்கீல் மகேந்திர சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும்  9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி.போலீசாரால் கடந்த 2-4-2018 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் 9-4-2018 அன்று சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண் சுப்ரீம் கோர்ட் (முன்னாள்) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கற்பழிப்பு, விபத்து, கள்ளத்துப்பாக்கி வழக்கு, அவரது தந்தையின் மரணம் மற்றும் அதன் தொடர்புடைய இதர வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 1-8-2019 அன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

உன்னாவ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தை உத்தர பிரதேசம்அரசு வழங்கியது. மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறிய பின்னர் மத்திய துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் மகளிர் ஆணைய நிர்வாகிகள் கண்காணிப்பில் டெல்லியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்தாருடன் அந்த இளம்பெண் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இந்த கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கடந்த
9-8-2019 அன்று டெல்லி டிஸ் ஹசாரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்துகொண்டார்.

அன்றிலிருந்து தொடங்கிய விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பின்னர், இருதரப்பு வக்கீல்களின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் கற்பழிப்பு வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா கடந்த 16-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை கேட்டதும் குல்தீப் சிங் செங்கார் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கான தண்டனை தொடர்பாக 17-ம் தேதி விவாதம் நடந்தது. அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார்.

குல்தீப் சிங் செங்கார் மீது இதற்கு முன்னர் வேறெந்த குற்றவழக்குகளும் இல்லாததாலும் முதன்முறையாக தவறு செய்தவர் என்பதாலும் மிகவும் குறைந்தபட்சமான தண்டனை விதிக்க வேண்டும் என குல்தீப் சிங் செங்காரின் வக்கீல் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கவனித்த மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா, தண்டனை விபரம்  20-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கடந்த 2017-ம் ஆண்டு உ.பி.சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது வேட்புமனுவுடன் குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகல்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் தண்டனை விபரத்தை வாசித்த மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா, குற்றவாளி குல்தீப் சிங் செங்காரை ஆயுள் வரை சிறையில் அடைக்குமாறும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.

அபராதத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com