பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் குடித்த 20 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு அருகே பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் குடித்த 20 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்த ஆடுகள்
உயிரிழந்த ஆடுகள்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரி வள்ளிபுரம் அருகே உள்ள நாவாங்கட்டு தோட்ட பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாய கூலி தொழிலாளி. இவர் 33 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை வழக்கம் போல் தோட்டத்தில் மேய்த்துவிட்டு வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைப்பார். அதேபோல் நேற்று முன்தினம் மேய்த்துவிட்டு மதியம் 12 மணி அளவில் வீட்டுக்கு ஓட்டி வந்தார்.

பின்னர் வீட்டின் அருகே பெரிய பிளாஸ்டிக் வாளியில் ஆடுகள் குடிப்பதற்காக தண்ணீர் வைத்தார். அந்த தண்ணீரை ஆடுகள் குடித்தன. இதில் 20 ஆடுகள் திடீர் என்று வாயில் நுரை தள்ளியபடி ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தன. சிறிது நேரத்தில் 20 ஆடுகளும் இறந்தன. இதைப்பார்த்த தங்கவேல் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோட்டில் இருந்து கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளின் உடல்களை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆடுகளின் உடற்கூறுகள் ரசாயன பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்புதான் ஆடுகள் குடித்த தண்ணீரில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது பிளாஸ்டிக் வாளியில் உள்ள ரசாயனம் விஷமாக மாறியதா? என்பது தெரிய வரும்.

20 ஆடுகளும் தண்ணீர் குடித்தபோது மற்ற 13 ஆடுகள் ஒதுங்கி நின்றதால் உயிர் தப்பின. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ் வழக்கு பதிவு செய்து ஆடுகள் தண்ணீர் குடித்த வாளியில் யாராவது விஷம் கலந்து விட்டனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com