மொபட் மீது சரக்கு வேன் மோதியதில் 2 பெண்கள் பலி

கள்ளிமந்தையம் அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள தொப்பக்காவலசு பகுதியை சேர்ந்த ராஜேஸ் மனைவி தீபா (வயது 23). இவர் நேற்று விவசாய கூலிவேலைக்காக, உறவினரான அதே பகுதியை சேர்ந்த கணபதி மனைவி மணியரசியுடன் (34) தொப்பக்காவலசு பகுதியில் இருந்து கள்ளிமந்தையம் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை தீபா ஓட்டினார். கள்ளிமந்தையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் வந்தபோது, தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த சரக்குவேன் இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தீபா, மணியரசி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர்கள் சிறிது நேரத்தில் இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான அவர்கள் உடல் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சரக்குவேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com