சோளிங்கர் அருகே கேட்பாரற்று நின்ற காரில் 2 டன் செம்மரம் பறிமுதல்

சோளிங்கர் அருகே கேட்பாரற்று நின்ற காரில் 2 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் பூண்டி அம்மன் கோவில் அருகில் ஒரு கார் கேட்பாரற்ற நிலையில் நின்றிருந்தது. நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காரில் 6 அடி நீளத்தில் 2 டன் எடையில் 14 செம்மரக் கட்டைகள் இருந்தன.

இதுபற்றி சோளிங்கர் போலீசுக்கு நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், கொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் சோதனை செய்தனர். அதில் இருந்த செம்மரக்கட்டைகளை காருடன் பறிமுதல் செய்து, ராணிப்பேட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது, காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்மநபர்கள் யார், செம்மரக்கட்டைகள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசாரும், வனத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com