திருப்பூரில் ஆசிரியை உள்பட 2 பேரிடம் நகை பறித்த கொள்ளையர் கைது

ஆசிரியை உள்பட 2 பேரிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் ஆசிரியை உள்பட 2 பேரிடம் நகை பறித்த கொள்ளையர் கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 48). இவர் ஜெய்பாவாய் மாநகராட்சி பள்ளியில் ஓவிய ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலை இவர் குத்தூஸ்புரம் அருகே மொபட்டில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வளர்மதியிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை பறிப்பு நபர்களை போலீசார் தேடி வந்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் வாகன தணிக்கையின் போது 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (44), நல்லூரை சேர்ந்த பார்த்தீபன் (40) என்பதும், இவர்கள் தான், ஆசிரியை வளர்மதியிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பூர் ஊரகம், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தலா 2 நகை பறிப்பு வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 30 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ரமேஷ், பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com