

ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் இன்று காலை ரோந்து சென்றனர். கொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் யார்? என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நக்சலைட்டுகள் தற்போது தியாகிகள் வாரம் கடைபிடித்து வருவதாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தாண்டேவாடா, பிஜாபுர், பஸ்பார், நாராயன்பூர், கொண்டகான், அக்பா மற்றும் கால்கர் ஆகிய 7 மாவட்டங்களில் நக்சல் ஒழிப்பு சிறப்புபடையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக டி.ஜி.பி. சுந்தர்ராஜ் தெரிவித்தார்.