ரஜினி கட்சியில் ஒரேநாளில் 2 லட்சம் பெண்கள் சேர்ந்தனர்

தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் ரஜினி கட்சியின் மகளிர் அணியில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ரஜினி கட்சியில் ஒரேநாளில் 2 லட்சம் பெண்கள் சேர்ந்தனர்
Published on

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வருகிறார். சட்டசபை தேர்தலின் போது 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளம், செல்போன் செயலி ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதன் முதலாக வேலூர் மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற தலைவராக சோழிங்கர் என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரஜினி மக்கள் மன்றத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். மகளிரை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அதிக எண்ணிக்கையில் பெண்களை சேர்க்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மக்கள் மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கை மாநிலம் முழுவதும் நடந்தது.

ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்களில் இருந்து மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாயிகள் அணி அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி இந்த அணிகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நேற்று நடந்தது. இதில் மகளிர் அணியில் சேர ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் கொடுத்தனர்.

நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கையின்போது ரஜினி கட்சியின் மகளிர் அணியில் சென்னை மாம்பலம், கே.கே.நகர் பகுதிகளில் சுமார் ஆயிரம் பெண்கள் சேர்ந்தனர். குறிப்பாக ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நெல்லை, கரூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் உறுப்பினராக ஆர்வமுடன் சேர்ந்தனர் என்று மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் சேர்ந்தனர். இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் பெருமளவில் பெண்கள் ஆர்வமுடன் சேர்ந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ரஜினி கட்சியின் மகளிர் அணியில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுபோல் இளைஞர் அணி, விவசாயிகள் அணிக்கும் ஏராளமானோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். ரஜினி உத்தரவுப்படி மகளிர் அணிக்கு தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரஜினி கட்சியில் பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த 2 அணிகளையும் பலம் பொருந்திய அணிகளாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் தோறும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இன்று தூத்துக்குடி மாவட்டத்திலும், நாளை நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இதற்கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதன்பிறகு இந்த மாவட்டங்களுக்கான மன்ற நிர்வாகிகள் முறைப்படி அறிவிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மக்கள் மன்றம் சார்பிலும் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதில் சேர பெண்களும், இளைஞர்களும் ஆர்வமாக உள்ளனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்று மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com