முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவருடைய மகன் சாகுல் அமீது(வயது 20). அதே பகுதியில் உள்ள தர்கா ரோட்டை சேர்ந்த பரக்கத் அலி மகன் சதாம் உசேன்(22). இருவரும் நண்பர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் முத்துப்பேட்டையில் இருந்து நாச்சிக்குளத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சாகுல் அமீது ஓட்டினார். உப்பூரில், மெயின் ரோட்டில் சென்றபோது சாலை ஓரத்தில் கொட்டி கிடந்த ஜல்லிக்கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த சாகுல் அமீது, சதாம் உசேன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com