

தேன்கனிக்கோட்டை:
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), பி.எஸ்.சி. கணிதம் படித்துள்ளார். பென்னாகரம் மடம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (39), டிப்ளமோ பட்டதாரி. இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் பகுதியில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனர் குழந்தைசாமி தலைமையில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் மற்றும் குழுவினர், நாட்றாம் பாளையம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சக்திவேல் மற்றும் சிவக்குமார் ஆகியோர், மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும், அவர்கள் போலி டாக்டர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனால் கிளினிக்குகளில் இருந்த மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கிளினிக்குகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் போலி டாக்டர்கள் சக்திவேல் மற்றும் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் அஞ்செட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான 2 போலி டாக்டர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.