அரியலூர் அருகே தொகுப்பு வீடு இடிந்து 2 பேர் பலி

அரியலூர் அருகே தொகுப்பு வீடு இடிந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி புளியங்குடி கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் பாண்டியன் (வயது 29), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. அவரது மனைவி தேவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

நேற்றிரவு பாண்டியனுக்கும், உறவினர் குமார் என்பவரின் மகன் கருப்புசாமி (16) என்பவருக்கும் உணவு பரிமாறி விட்டு பாண்டியன் மனைவி வெளியே சென்று விட்டார்.

அப்போது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாண்டியன், கருப்பு சாமி 2 பேரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் மீட்டனர். அப்போது கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது.

இதையடுத்து பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக சுத்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். பாண்டியன் மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இல்லையென்றால் அவரும் பலியாகி இருப்பார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொகுப்பு வீடு இடிந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com