தென்காசியில் ரூ.1.46 கோடி கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 2 பேர் கைது

தென்காசியில் ரூ.1.46 கோடி கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசியில் ரூ.1.46 கோடி கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 2 பேர் கைது
Published on

தென்காசி:

தென்காசியில் கடந்த சில மாதங்களாக மர்ம கும்பலால் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸ்காரர்கள் விக்னேஷ், சக்தி ராஜேந்திரன், முத்துமாரி, சண்முகநாதன், சண்முகவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்றிரவு தென்காசி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதானவர்கள் சங்கரன்கோவிலை சேர்ந்த அசன்(வயது 61), புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த சாமிதுரை (49) என்பது தெரியவந்தது.

பின்னர் சாமிதுரை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.100 மதிப்புடைய ரூ.1 கோடியே 40 லட்சம் கள்ள நோட்டுகள் கட்டுகட்டாக அச்சடித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கள்ளரூபாய் நோட்டுகளையும், அவற்றை அச்சடிக்க பயன்படுத்திய 3 ஜெராக்ஸ் எந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிந்து பிடிபட்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிகிறது. அவர்கள் எங்கெங்கு புழக்கத்தில் விட்டார்கள்? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com