

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேருக்கு 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை கடந்த 2007 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியது.
இதன் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 2015 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தாதா தாவூத் இப்ராகிம், அனிஸ் இப்ராஹிம், டைகர் மேமன் உள்ளிட்ட 27 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான மற்றொரு வழக்கு மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த தாதா அபு சலீம், முஸ்தபா தோசா, பிரோஸ்கான், ரியாஸ் சித்திக்கி, கரிமுல்லா ஷாயிக், முகமது தாகிர் மெர்ச்சன்ட் என்கிற தாகிர் தக்லியா ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல் கயூம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.