18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு செவ்வாய்க்கிழமை தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதற்கான தேதி வருகிற செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு செவ்வாய்க்கிழமை தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்பு
Published on

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க.வில் உள்ள 20 எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஒரு சாரார் டி.டி.வி.தினகரன் தலைமையை ஆதரிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரை கொண்ட முதல் டிவிசன் பெஞ்சில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது.

இந்த வழக்குடன் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களை நீக்கக் கோரிய வழக்கு மற்றும் சட்டசபைக்குள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குட்கா கொண்டு வந்த வழக்கு உள்பட 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

கடந்த மாதம் இந்த வழக்குகளின் விசாரணை முடிந்தது. தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். 18 எம். எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றங் களை ஏற்படுத்தும் என்று கடந்த சில தினங்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த தீர்ப்பை அனைத்து அரசியல் கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமை எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அன்றைய தினம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியாகும் என்று பேசப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com