

கராச்சி:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஜால் மக்சி பகுதியில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடைபெற்ற போது, ஒரு பயங்கரவாதி உள்ளே நுழைய முயன்றுள்ளான். அவனை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் தொடர்ந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் சாகித் ககான் அப்பாசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது அரசு முழு வலிமையுடன் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இதே மசூதியில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.