அமெரிக்கா: கருப்பினத்தவர் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நடந்த போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது 17 வயது நிரம்பிய இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதி
போராட்டம் நடைபெற்ற பகுதி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. 

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன

இதற்கிடையில், ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் அமெரிக்கவில் நிகழ்ந்துள்ளது. விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் பல முறை சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

சிலர் போலீசார் மீது கற்கலை வீசியும், அருகில் இருந்த கார்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கலவரத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு  இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து ஒட முயற்சித்தனர்.

ஆனாலும், அந்த இளைஞன் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். 

காயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் 2 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயங்களுடன் ஒருவர்

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இளைஞர் சிறுது நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற அண்டிஜோ பகுதியை சேர்ந்த கெலி ரிட்டின்ஹவுஸ் என்ற 17 வயது இளைஞனை கைது செய்தனர். கெலி ரிட்டின்ஹவுஸ் போலீசாரின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.

ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தேசிய பாதுகாப்பு படையினரை விஸ்கான்சின் மாகாணத்திற்கு அதிபர டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com