ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்களிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு

ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்களிடம் 15 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்களிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி கயல்விழி (வயது29). இவர் நேற்று செம்பாளூர் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயார் செல்வராணியை (49) ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். இவர்கள் ஒரத்தநாடு அருகே வடக்குநத்தம் பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கயல்விழியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

அதேபோல் பேராவூரணியை சேர்ந்தவர் நீலகண்டமூர்த்தி என்பவருடைய மனைவி சுந்தரி (34). இவரும் அதே செல்லம்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேராவூரணியை சேர்ந்த ரெங்கசாமி மனைவி நீலவேணி (35) என்பவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை சுந்தரி ஓட்டினார்.

திருவோணம் அருகே தளிகைவிடுதி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் சுந்தரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை திடீரென பறித்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தங்க சங்கிலியுடன் தப்பி விட்டனர்.

ஒரத்தநாடு பகுதியில் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற 2 பெண்களிடம் 15 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கயல்விழி ஒரத்தநாடு போலீசிலும், சுந்தரி திருவோணம் போலீசிலும் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார், பெண்களிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com