டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை- 2 கிலோ வெள்ளி கொள்ளை

கும்பகோணம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை- 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொள்ளை நடைபெற்ற டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்த காட்சி.
கொள்ளை நடைபெற்ற டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்த காட்சி.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் முழையூர் மெயின் ரோடு பகவதி அம்மன் கோவில் அருகே வசிப்பவர் ரவிச்சந்திரன்(வயது62). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரவிச்சந்திரனின் அண்ணன் விஜயேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ரவிச்சந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது அண்ணன் வீட்டுக்கு சென்று சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்தார். நேற்று காலை ரவிச்சந்திரன் வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக தங்களது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டுகள் மற்றும் மரக்கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தன. 

இதுகுறித்து ரவிச்சந்திரன் பட்டீஸ்வரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரும் ஓடிசென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கொள்ளை போன தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.6¼ லட்சம் என கூறப்படுகிறது. டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை- 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போன சம்பவம் பட்டீஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com