

கோவை:
கோவை சூலூர் கருப்பண்ண வீதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் பிரகாஷ் (வயது 19). கூலித் தொழிலாளி.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார்.
இது குறித்து சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேருக்கும் அவரது உறவினர்கள் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின்னர் பிரகாஷ் கருகலைப்பு மாத்திரைகளை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளார். இதனால் சிறுமியின் கரு கலைந்து விட்டது.
பின்னர் பிரகாஷ் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றார். அதன்பின்னர் சிறுமியை பார்க்க அவர் வரவில்லை. சிறுமியின் உறவினர்கள் பிரகாசை சந்தித்து சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.
இது குறித்து அந்த சிறுமி பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றிய பிரகாசை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த உறவினர் ரஜினிகாந்த் என்பவரை தேடி வருகிறார்கள். #tamilnews