13 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த டாக்டர்

முஷாபர் நகரில் 13 வயது சிறுமியை டாக்டர் ஒருவர் 3 தினங்களாக அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த தகவல் வெளியாகி உள்ளது.
13 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த டாக்டர்
Published on

முஷாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சோனு வர்மா.

டாக்டரான இவர் அந்த கிராமத்தில் கிளினிக் நடத்தி வருகிறார்.

அவரது மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 13 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றாள். ஆனால் அவள் கடந்த 3 தினங்களாக வீடு திரும்பவில்லை. சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவளது குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த சிறுமி மயக்கமான நிலையில் வீடு திரும்பினாள். சிகிச்சைக்கு சென்ற போது டாக்டர் தனக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும், 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தாள். மேலும் தான் டாக்டரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் கூறினாள்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து டாக்டர் சோனுவர்மாவை கைது செய்தனர். அதோடு அவரது மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தனர். கிளினிக்கில் இருந்த ஆட்சேபகரமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். டாக்டரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கத்துவா, (காஷ்மீர்), உன்னாவ் (உத்தரபிரதேசம்), சூரத் போன்ற பகுதிகளில் நடந்த சிறுமி கற்பழிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் 13 வயது சிறுமியை டாக்டர் ஒருவர் 3 தினங்களாக அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com