குமரியில் புயல் தாக்குதலில் 13 ஆயிரம் மின்கம்பங்கள் நாசம்: கண்காணிப்பு அதிகாரிகள் பேட்டி

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்குதலில் 13 ஆயிரம் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்துள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் நிலைமை சீராகும் என்று கண்காணிப்பு அதிகாரிகள் கூறினர்.
சேதமடைந்த வாழைகளை வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்ட காட்சி
சேதமடைந்த வாழைகளை வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்ட காட்சி
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்குதலில் 13 ஆயிரம் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு முழுவீச்சில் பணி நடந்து வருகிறது. 6320 பணியாளர்கள் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் 1500 ஹெக்டேர் நெற்பயிர்களும், 1500 ஹெக்டேரில் ரப்பர் மரங்களும் சேதம் அடைந்துள்ளது. லட்சக்கணக்கான வாழைகளும் முறிந்து நாசமானது. இதை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்துறை, விவசாயத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழை சேத மீட்பு பணிகளை துரிதப்படுத்த சென்னையில் இருந்து வந்துள்ள 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மின்உற்பத்தி மற்றும் பகிர்மானதுறை செயலாளர் சாய்குமார் கூறுகையில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் தாக்குதலில் 110 கிலோ வாட் அளவுள்ள 13 சப்-ஸ்டே‌ஷன்கள் பழுதடைந்துவிட்டன. அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

நாகர்கோவில் மற்றும் குளச்சல், குழித்துறை நகராட்சி பகுதிகளில் 80 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. 55 பேரூராட்சி பகுதிகளில் 41 பேரூராட்சிகளுக்கும் 95 ஊராட்சிகளில் 55 ஊராட்சிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணியில் மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வார்தா புயல், தானே புயலைவிட சவாலாக அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள இடங்களில் மலைப்பகுதிகளும் உள்ளதே இதற்கு காரணமாகும். இன்னும் 3 நாட்களுக்குள் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்படும் என்றார்.

வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில் பயிரிழப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. முழுமையான சேதம், பகுதி வாரியான சேதம் என பிரித்து கணக்கெடுக்கப்படுகிறது. 3696 ஹெக்டேரில் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. 75 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் கணக்கெடுக்கும் பணி நிறைவுபெறும்.

இதைதொடர்ந்து நிவாரணங்கள் வழங்கப்படும். பிரதமர் பயிர் காப்பீடு திட்ட விவசாயிகளுக்கு 2 இழப்பீடு தொகையுமே கிடைக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com