

லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுகாமாயூ என்ற இடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது வீட்டுக்கு அருகே 25 வயது வாலிபர் ஒருவர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். சம்பவத்தன்று சிறுமி ராணி தண்ணீர் எடுத்துக் கொண்டு விட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அண்டை வீட்டு வாலிபர் ராணியை தனது அறையில் வைத்து கற்பழித்தார். இதை பெற்றோரிடமோ வெளியில் வேறு யாரிடமோ தெரிவித்தாலோ உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். எனவே அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில் அவள் கர்ப்பம் அடைந்தாள். பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
பின்னர் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க டாக்டரிடம் அழைத்து சென்றனர். அதற்கான காலம் கடந்துவிட்டது. கருவை கலைக்க முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். அதை தொடர்ந்து ராணி சமீபத்தில் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஆண் குழந்தை பெற்றாள்.
ஆனால் இந்த குழந்தை எனக்கு வேண்டாம். அதை வளர்க்க விரும்பவில்லை என சிறுமி ராணி தெரிவித்தாள். குழந்தையை பார்க்க கூட அவள் விரும்பவில்லை.
ராணியின் தாயாரும் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என தெரிவித்தார். நாங்கள் மிகவும் ஏழைகள். எனவே எங்களால் குழந்தையை வளர்க்க முடியாது. மேலும் அக்கம்பக்கத்தினர் மிகவும் கேவலமாக பேசுவார்கள். அதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை என்றாள். சிறுமியின் கற்பழிப்பு வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.