

விருதுநகர்:
விருதுநகர் பாறைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது 12 வயதான அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை மகேந்திரன் மற்றும் அவரது அண்ணன் மகன் காமராஜ பெருமாள் (25) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது.
தத்தெடுத்த சிறுமியை மகள் என்றும் பாராமல் மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் மகேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு உதவியாக மனைவி ஆஸ்பத்திரியில் இருந்ததால் 12 வயது சிறுமியை மகேந்திரனின் சகோதரர் வீட்டில் விட்டுள்ளனர். அங்கும் சிறுமியை நிம்மதியாக இருக்க விடாமல் சகோதரன் முறை கொண்ட காமராஜபெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் மற்றும் காமராஜபெருமாளை கைது செய்தனர்.