சொட்டுநீர் பாசனம் மூலம் ஏக்கருக்கு 12 டன் தர்பூசணி மகசூல்- பாராட்டு பெறும் விவசாயி

சொட்டு நீர் பாசனம் மூலம் அனைத்து தடைகளையும் தாண்டி நல்ல மகசூல் பெறமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் விவசாயி குலசேகரன்.
தர்பூசணி
தர்பூசணி
Published on

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குலசேகரன் விவசாயி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். வறட்சியான பகுதி என்பதால் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யப்படுவதால் நீரை சேமிக்க ஆண்டுதோறும் தர்ப்பூசணி விதைகள் நடவு செய்தபின் அறுவடை வரை தினமும் ஆட்களை கொண்டு குடங்கள் மூலம் ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றியே பயிர் செய்து வந்தார்.

இதனால் ஏற்பட்ட காலவிரயம் மற்றும் பண விரயத்தை தடுக்க மாற்று வழி தேடி சீர்காழி அரசு தோட்டக்கலை துறை அலுவலகத்தை நாடினார். அப்போது அதிகாரிகள் மானியத்துடன் கிடைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்பு குறித்தும் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர்.

உடனே தனது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவ குலசேகரன் விண்ணப்பித்தார். அதன்படி கடந்த மார்ச் மாதம் தோட்டக்கலை துறை மூலம் அவரது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவப்பட்டது. தர்ப்பூசணி சாகுபடியை துவங்கினார் விவசாயி குலசேகரன்.

3 மாத கால பயிரான தர்பூசணி 65 நாட்களிலேயே அறுவடை பருவத்தை எட்டியதுடன் நல்ல மகசூலையும் கொடுத்துள்ளது. இதுவரை ஏக்கருக்கு 6 டன் மட்டுமே மகசூல் கிடைத்த நிலையில் இந்தாண்டு 12 டன் மகசூல் கிடைத்துள்ளதாகவும் ஒரு பழம் 15 கிலோ வரை எடை நிற்பதால் அதிக லாபம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் குலசேகரன்.

சொட்டு நீர் பாசனம் மூலம் கடும் வறட்சி, தண்ணீர் சிக்கனம், உரங்கள் இடும் நேரம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை என அனைத்து தடைகளையும் தாண்டி நல்ல மகசூல் பெறமுடியும் என நம்பிக்கை தெரிவித்த குலசேகரன் மற்ற விவசாயிகளும் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சுற்றியுள்ள வயல்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கும் நிலையில் சொட்டுநீர் பாசனம் மூலம் 15 கிலோ எடை கொண்ட பழங்களையும் ஏக்கருக்கு 12 டன் மகசூலையும் பெற்று சாதித்த விவசாயி குலசேகரனை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பொன்னி, உதவி அலுவலர் செல்வராஜ், குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com