கடந்த 4 ஆண்டுகளில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ மூலம் ரெயில் நிலையங்களில் 11 ஆயிரம் குழந்தைகள் மீட்பு

கடந்த 4 ஆண்டுகளில் ஆபரேஷன் ஸ்மைல் மூலம், ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 11 ஆயிரத்து 244 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என்று ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு ‘ஆபரேஷன் ஸ்மைல்’ குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்த காட்சி
ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு ‘ஆபரேஷன் ஸ்மைல்’ குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்த காட்சி
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற பெயரில், ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் குழந்தைகள் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு, அவர்களது பெற்றோர் மற்றும் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டுவரும் இந்த ‘ஆபரேஷன் ஸ்மைல்’ நிறைவு நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். ஐ.ஜி வனிதா மற்றும் டி.ஐ.ஜி. ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘ஆபரேஷன் ஸ்மைல்’ மூலம் குழந்தைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த ரெயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘ஆபரேஷன் ஸ்மைல்’ மூலம் கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் ஆயிரத்து 80 குழந்தைகளை மீட்டுள்ளோம். தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும், வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள் மற்றும் வழிதவறி வந்த குழந்தைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 371 பேர் மீட்கப்பட்டு, அதில் 66 குழந்தைகள் அவர்களது பெற்றோரிடமும், 2 ஆயிரத்து 305 குழந்தைகள் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்குழந்தைகள் 2 ஆயிரத்து 99 பேரும், பெண்குழந்தைகள் 272 பேரும் அடங்குவர். அதேபோல் 2017-ம் ஆண்டு 2 ஆயிரத்து 68 குழந்தைகளும், 2018-ம் ஆண்டு 2 ஆயிரத்து 475 குழந்தைகளும், 2019-ம் ஆண்டு 2 ஆயிரத்து 392 குழந்தைகளும், 2021-ம் ஆண்டில் தற்போது வரை ஆயிரத்து 106 குழந்தைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 244 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 88 சதவீதம் ஆண் குழந்தைகள். மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளில் 76 சதவீதம் பேர் காப்பகத்திலும், 24 சதவீதம் பேர் அவர்களின் பெற்றோரிடமும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ரெயில்வே போலீசில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. திருச்சி மற்றும் சென்னை ரெயில் நிலையத்தில் மட்டுமே 30 சதவீதம் பெண் போலீசார் பணியாற்றுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com